தமிழகம்

தாராபுரம் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு; 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாராபுரம் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அன்று பெரியார் பிறந்த நாளில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைச் சாலை தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையின் மீது காலணிகளை வைத்து அவமதிப்பு செய்யப்பட்டது. பெரியார் சிலையை அவமதித்து செல்ஃபி எடுத்த தொழிலதிபர் கந்தசாமியின் மகன் நவீன்குமாரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வி.தண்டபாணி முன்பு 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நவீன்குமாரின் வழக்கறிஞர் மனோகரன், ''நவீன்குமார் மனநிலை சரியில்லாதவர். அவர் மனநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று வாதிட்டார். மேலும், மருத்துவச் சான்றிதழையும் சமர்ப்பித்தார்.

அந்தச் சான்றிதழ்களை திராவிடர் கழக வழக்கறிஞர் குமாரதேவனிடம் கொடுத்த நீதிபதி, ''நவீன்குமார் மனநோயாளி என்பதால் அவரைச் சிறையில் வைத்திருக்க வேண்டுமா?'' என்று கேட்டார்.

''நவீன்குமார் மனநோயாளி அல்ல. பெரியார் பிறந்த நாள் அன்று திட்டமிட்டே அவர் அவமதிப்பு செய்துள்ளார். இந்தக் குற்றத்தை தெரிந்தே செய்த அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று வழக்கறிஞர் குமாரதேவன் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிபந்தனைகளுடன் நவீன்குமாருக்கு ஜாமீன் வழங்கினார். பெரியார் சிலையை நவீன்குமாரின் குடும்பத்தினர் சீர்செய்ய வேண்டும், நவீன்குமார் மனநோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், சிகிச்சைக்குப் பிறகு தாராபுரம் காவல் நிலையத்தில் இரு வாரங்கள் கையெழுத்திட வேண்டும், இது போன்ற சம்பவங்களில் மீண்டும் ஈடுபட்டால் அவரது ஜாமீன் காலாவதியாகிவிடும். அவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து நவீன்குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என, திராவிடர் கழக திருப்பூர் மாவட்டச் செயலாளர் சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல, தமிழகத்திலும் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டர் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. இன்னும் புலன் விசாரணை முடியவில்லை என்று அரசு வழக்கறிஞர் கூறினார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT