சிறுவனிடம் காலணிகளை கழற்றச் சொல்லும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 
தமிழகம்

காலணிகளைக் கழற்றி விடச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடி சிறுவன் புகார்: பதிவு செய்யப்படாத எஃப்ஐஆர்

ஆர்.டி.சிவசங்கர்

தன்னைக் காலணி கழற்றச் சொன்ன தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடிச் சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரியில் நேற்று (பிப்.6), தனது காலணிகளை பழங்குடிச் சிறுவனை அழைத்து கழற்றிவிடச் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. 48 நாட்கள் நடைபெற உள்ள இந்த முகாமைத் தொடங்கி வைக்க தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலை வந்திருந்தார்.

அமைச்சரை மாவட்ட ஆட்சியர், புலிகள் காப்பகக் கள இயக்குநர், வனத்துறை உயர் அதிகாரிகள் வரவேற்று முகாமில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்தனர். அரசியல் கட்சியினர், அதிகாரிகள் படை சூழ வந்த அமைச்சர், யானை அருகில் நின்றிருந்த இரண்டு பழங்குடிச் சிறுவர்களை அழைத்து தனது காலணிகளைக் கழற்றிவிடச் செய்தார். இந்தச் சம்பவம் அப்போதே அங்கிருப்பவர்களை முகம் சுளிக்கச் செய்தது.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாகின. இதுகுறித்து உள்ளூர்‌ முதல் தேசிய அளவிலான ஊடகங்கள் வரை செய்தி வெளியாகி தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு தலைவர்களும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்குக் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தான் அந்தச் சிறுவர்களை தன்னுடைய பேரனாகக் கருதியே காலணிகளை கழற்றிவிடச் சொன்னதாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர், பழங்குடி அமைப்புக்கள் எனப் பலரும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலகக்கோரி திமுக சார்பில் நாளை கூடலூரில் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தன்னைக் காலணி கழற்றச் சொன்ன தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடிச் சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், தான் அரசுப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், 8 வருடங்களுக்கு முன்பே தன் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், கூலி வேலைக்குச் சென்று தன் தாய்தான் பராமரித்து வருவதாகவும் அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார். தான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவன் எனக் குறிப்பிட்டுள்ள அச்சிறுவன், யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கப்படும் இடத்திற்கு அருகிலுள்ள விநாயகர் கோயிலில் நின்றிருந்தபோது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை அழைத்து "டேய், வாடா, வாடா, இங்கே வாடா, காலில் உள்ள செருப்பைக் கழற்றுடா" எனக் கூறியதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

அப்போது, தன்னுடன், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு சிறுவனும் உடன் வந்ததாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சொல்கிறார் என்பதாலும், உடன் அதிகாரிகள், போலீஸார் இருப்பதாலும் பயந்துகொண்டே, பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் முன்பாக அமைச்சரின் காலணிகளைக் கழற்றியதாகவும், அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பலர் இருந்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளார். தான் காலணிகளைக் கழற்றுவதை அனைவரும் வேடிக்கை பார்த்தனர் எனவும், சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் புகார் மனு

அங்கு கூடியிருந்த அனைவரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அங்கிருந்த அமைச்சர் உட்பட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ள சிறுவன், தன்னை அழைத்து இவ்வாறு செய்யச் சொன்ன செயலை நினைத்து பயத்துடன் பெரும் வேதனை அடைந்ததாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.

எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் தான் காலணிகளைக் கழட்டி விட்ட நிகழ்வு ஒளிபரப்பானதை அறிந்து பெரும் அவமானத்திற்கு உள்ளானதாக சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தான் பயந்த நிலையிலும் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்ற அச்சத்திலும், அழுதுகொண்டே வீட்டில் இருந்ததாகவும், பின்னர் தனது பெற்றோரும் பழங்குடி முன்னேற்றச் சங்கத்தினரும் தனக்கு ஆறுதல் கூறி, தைரியப்படுத்தி ஆதரவளித்ததால், புகார் கொடுக்க மன ரீதியாக தயாரானதாக அச்சிறுவன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு புகாரில் அச்சிறுவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT