பழங்குடியின மாணவரிடம் காலணியைக் கழற்றச் சொன்ன விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது திராவிட விடுதலை கழகம் சார்பில் மதுரை மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று (பிப்.6) தொடங்கியது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முகாமைத் தொடங்கி வைக்க முதுமலை வந்தார். முகாம் தொடங்கி வைக்கும் முன்னர் அங்குள்ள கோயிலில் பூஜைக்கு அழைக்கப்பட்டார்.
கோயிலுக்குள் செல்வதற்காக காலணியைக் கழற்ற அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்தார். சிறுவனை, தனது காலணியைக் கழற்றி விடச் சொன்னார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துவிடாதபடி மறைத்து நின்றுகொண்டார்.
வனத்துறை அமைச்சரின் இந்தச் செயல் பரவலாகக் கண்டனத்துக்குள்ளாகியது. இதனையடுத்து அமைச்சர் சீனிவாசன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால், அவர் மீது பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சார்பில் மசினகுடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திராவிட விடுதலை கழகத்தின் சார்பில் மதுரை மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மதுரை கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்படவுள்ளது.