சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்து, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அளிக்கக் கோரி மனு அளித்தார். 
தமிழகம்

முதல்வர் பழனிசாமியுடன் சீமான் சந்திப்பு: தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்காகவும், தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்தியதற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் வலியுறுத்த கோரியுள்ளோம். அதேபோல் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கமத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளோம். அடுத்த முறை உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்திக்கும்போது இதுபற்றி மீண்டும் வலியுறுத்துவதாக முதல்வர் தெரிவித்தார்.

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, மகாவீர் ஜெயந்தி ஆகிய நிகழ்வுகளுக்கு பொது விடுமுறை அளிப்பதைப் போல், தமிழ்க்கடவுளான முருகனுக்காக கொண்டாடப்படும் தைப்பூச விழாவுக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதையும் பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை நிராகரிப்பதுடன், தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, மகாவீர் ஜெயந்தியைப் போல், தமிழ்க்கடவுள் முருகனுக்கான தைப்பூச விழாவுக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT