2019-ல் நடந்துள்ள 57,728 விபத்துகளில் 10,525 பேர் இறந்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 1,691 பேர் குறைவாகும். இதற்கிடையே, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் சாலை பாதுகாப்பு முறையை, பிற மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்கின்றனர்.
தமிழகத்தில் நடந்து வரும் சாலை விபத்துகள், இறப்புகளைக் குறைக்க, தமிழக அரசு போக்குவரத்து, காவல் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளோடு இணைந்து பணியாற்றி வருகிறது. இதனால், சாலை விபத்துகளும், இறப்புகளும்கடந்த 4 ஆண்டுகளாக படிப்படியாககுறைந்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 57,728 சாலை விபத்துகளில் மொத்தம் 10,525 பேர் இறந்துள்ளனர். சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், சாலை பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதனால், சாலை விபத்துகளில் இறப்பு வீதம் கடந்த ஆண்டில் 13 சதவீதம் குறைந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைக்க சாலைபாதுகாப்பு நிதி மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டம்தோறும் நடக்கும் சாலை விபத்துகளை ஆய்வு செய்து, அந்த இடத்தில் விபத்தைக் குறைக்க புதிய திட்டமிடல்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். சாலை விபத்து ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் சுகாதாரத் துறை மூலம் மருத்துவமனைகளிடையே தொடர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
போக்குவரத்துத் துறை மட்டுமல்லாமல், சுகாதாரம், காவல் துறை உள்ளிட்டவற்றோடு இணைந்துபணியாற்றி வருவதன் பலனாக சாலை விபத்துகளில் ஏற்படும் இறப்பு வீதத்தை படிப்படியாக குறைத்து வருகிறோம். 2019-ல் நடந்துள்ள 57,728 விபத்துகளில் 10,525 பேர் இறந்துள்ளனர். இதற்குமுந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 1,691 பேர் குறைவு.
இதற்கிடையே, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் சாலை பாதுகாப்பு முறையை ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட பிறமாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்கின்றனர். எனவே, வரும் ஆண்டுகளில் மேலும் இறப்பு வீதத்தைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
மத்திய அமைச்சர் பாராட்டு
“சாலை விபத்துகளைக் குறைக்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் நாட்டில் விபத்துகளைக் குறைக்க முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளது பாராட்டுக்குரியது’’ என மத்திய அமைச்சகர் நிதின்கட்கரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழகத்துக்கு இந்த குறைப்பு சதவீதம் போதாது. இன்னும் நாம் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அதிகமாக வேண்டுமென வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் கவனம் தேவை
இதுதொடர்பாக சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் போக்குவரத்து மற்றும் இதர துறைகளோடு இணைந்து மேற்கொண்ட தொடர் பணியால் சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் கடந்த 4 ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகின்றன.
சாலை பாதுகாப்பு முறையை தொடர்ந்து செயல்படுத்துவதில் அலட்சியம் கூடாது. சாலைகளில் விபத்து நடக்கும் இடங்களில் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளோடு, சாலை விதிகளை மீறுவோர் மீது அமலாக்க முறையையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் புதியஇலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்’’ என்றார்.