தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் சுதாகர் துகாராம் மற்றும் பிபி சவுத்ரி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்த பதில்:
’’தேசிய அளவில் மாணவர்கள் இடை நிற்றல் அதிகரித்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் மாணவர்கள் இடைநிற்றல் 8.1 சதவீதமாக இருந்தது. 2016-17 ஆம் ஆண்டில் இடைநிற்றல் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான், கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2015-16 ஆம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 8 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் விகிதம், 2017-18 ஆம் கல்வியாண்டில் 16.2 சதவீதமாக அதாவது இரு மடங்காக அதிகரித்தது
வறுமையான வாழ்க்கைச் சூழல், மோசமான குடும்பப் பொருளாதாரம், அருகாமைப் பள்ளி இல்லாதது, பெற்றோரின் சமூகச் சூழல், கல்வி குறித்த விழிப்புணர்வின்மை போன்ற சூழ்நிலைகளால் மாணவர்களின் இடைநிற்றல் தொடர்கிறது’’.
இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்விக்காக சிறப்பான முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், இடைநிற்றல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்த வேளையில், இத்தகைய தகவல் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.