தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 2 உறுப்பினர்கள் நீக்கத்துக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த காரணத்துக்காக கட்சி யில் இருந்து 2 உறுப்பினர்களை நீக்கியதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.சேகர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேணுகோபால் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கோவையில் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் நடத்திய இந்த மாநாட்டில், 122 மாநிலக் குழு நிர்வாகிகளும் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக இரா.முத்தரசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநில உறுப்பினர்கள் பட்டி யலை தானாகவே தா.பாண்டியன் தயாரித்துள்ளார். அத்துடன் கட்சி விதிமுறைப்படி தேர்தல் நடைபெறாததால் அதை செல் லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதனால், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி எங்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக செய்தி வெளியானது. இதுகுறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை.

எனவே, நாங்கள் கட்சிப் பணியை மேற்கொள்ள கட்சியின் தற்போதைய செயலாளர் முத்தரசனும், தா.பாண்டியனும் தடையாக இருக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்க முத்தரசனுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் இருவரும் நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தார். கட்சி செயலாளர் முத்தரசன் செயல்படுவதற்கு தடைவிதிக்கக் கோருவது, அவரது நியமனம் தொடர்பான பிரதான வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உத்தர விட்டார்.

SCROLL FOR NEXT