டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் சித்தாண்டி உட்பட 30 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்கை போலீஸார் முடக்கி உள்ளனர். ஜெயகுமாருக்கு உதவி செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படும் சிலரையும், அவர்களது செல்போன் உரையாடல்களையும் சட்டத்துக்கு உட்பட்டு போலீஸார் கண்காணித்தனர். ஆனால் ஜெயக்குமார் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருவதால், அவரை கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அவரைத் தேடி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.இந்தியா முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஜெயக்குமாரின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரூப் 4 முறைகேட்டில் கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனை சிபிசிஐடி போலீஸார் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.