தமிழகம்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பா?- சிபிஐ விசாரணை கோருகிறார் கார்த்தி சிதம்பரம்

இ.ஜெகநாதன்

‘‘டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்,’’ என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திறமை உள்ளவர்களுக்கே அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதுகின்றனர். தற்போது முறைகேட்டால் அந்த நம்பிக்கையும் வீணாகிவிட்டது. இந்த முறைகேட்டில் முக்கிய அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

இந்து, இந்துத்துவா, சம்ஸ்கிருத கொள்கை வைத்துள்ளவர்களுக்கு எதிராக கீழடி அகழாய்வு முடிவுகள் வருகின்றன.

மேலும் கீழடி மூலம் திராவிடக் கலாச்சாரம் தனியாக உருவானது எனத் தெரியவருகிறது. அதை மூடி மறைக்கவே மத்திய அரசு கீழடிக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குறைகள் இந்த பட்ஜெட் கூட்டத்தில் நிவர்த்தியாகும் என நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. வருங்காலங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வாய்ப்பு, சம்பளம் குறையும். இதனால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

தமிழகத்தின் டாடி மற்றும் காமெடி ஹீரோ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT