தமிழகம்

பாத யாத்திரை சென்ற முருக பக்தர்களை வழியனுப்பிய முஸ்லிம்கள்: மதநல்லிணக்க முயற்சிக்கு எஸ்.பி. பாராட்டு

த.அசோக் குமார்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்களுக்கு பயண பாதுகாப்புப் பொருட்கள் வழங்கி முஸ்லிம்கள் வழியனுப்பிவைத்தனர்.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரில் இருந்து திருமுருகன் திருச்சபை பாத யாத்திரை குழுவினர் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டும் பாத யாத்திரை புறப்பட்ட முருக பக்தர்களுக்கு, பயண பாதுகாப்பு பொருட்களை (டிராவல் கிட்) முஸ்லிம்கள் கொடுத்து வழியனுப்பிவைத்தனர்.

நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

ஜமாத் தலைவர் கோதர்முகைதீன், செயலாளர் முகம்மது மைதீன், துணைத் தலைவர் முகம்மது நதீர், பொருளாளர் சம்சுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, முருக பக்தர்களுக்கு முதலுதவி பொருட்கள் அடங்கிய பயண பாதுகாப்பு பொருட்களை வழங்கி, வழியனுப்பிவைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரகேரளம்புதூர் பொதுநல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்ராஜா செய்திருந்தார்.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்ட முஸ்லிம்களை எஸ்.பி சுகுணாசிங் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT