ஸ்டாலினைச் சந்தித்த 'ராப்' இசைப் பாடகர் அறிவு. 
தமிழகம்

சிஏஏவை எதிர்த்து 'ராப்' பாடிய 'தெருக்குரல்' அறிவைப் பாராட்டிய ஸ்டாலின்

செய்திப்பிரிவு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பாடல்கள் பாடி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ராப் இசைப் பாடகரை, மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக, தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர், சென்னையைச் சேர்ந்த ராப் இசைப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு. சமீபத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இவர், 'சண்ட செய்வோம்' என்ற பாடலை எழுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாடி கவனம் பெற்றார். இவர் அந்தப் பாடலை 'தெருக்குரல்' என்ற பெயரில் பாடி வந்தார்.

இந்நிலையில், இவரை இன்று (பிப்.5) அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இதையடுத்து, கருணாநிதியின் ஓராண்டு முரசொலி மலரை ராப் இசைப் பாடகர் அறிவுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும், சிஏஏவுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாகவும் அறிவு தனது கையொப்பத்தைப் பதிவு செய்தார்.

நினைவுப் பரிசை வழங்கும் ஸ்டாலின்

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அறிவு, "என்னுடைய பாடல் தமிழகம் முழுவதும் பார்த்து ரசித்து இருந்தாலும், ஒரு மிகப்பெரும் இயக்கத்தின் தலைவர் என்னை அழைத்துப் பாராட்டியது மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT