தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாளை முழு அடைப்பு நடத்தப்பட்டாலும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல இயங்கலாம் என்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கட்சிகள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:
மது ஒழிப்புக்காக காலமெல்லாம் போராடிய காந்தியவாதி சசிபெருமாள், தனது போராட் டத்தின்போதே உயிர்த் தியாகம் செய்துள்ளார். பச்சிளம் குழந்தை களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்ததும், 14 வயது மாணவி மது அருந்திவிட்டு சாலையில் தகராறு செய்ததும் தமிழகத்தில்தான் அரங்கேறின. அனைத்து மதங்களும் மதுப்பழக்கம் கூடாது என்றே சொல்கின்றன. காமராஜரும் அண்ணாவும் மதுவை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. சசிபெருமாளின் உயிர்த் தியாகத்தை மதித்து தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டியது நன்னெறி உள்ளோர் அனைவரின் கடமையாகும்.
இதை வலியுறுத்தி 4-ம் தேதி (நாளை) முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய நாங்கள் விரும்பவில்லை. எனவே, பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வழக்கம்போல இயங்கலாம்.
கடை அடைப்பு போராட்டத்தால் சிரமமும் பொருள் நட்டமும் ஏற்படுவதை எண்ணி மனம் வருந்தினாலும், வணிகப் பெருமக்களின் குடும்பங்கள் உட்பட தமிழகத்தின் அனைத்துக் குடும்பங்களையும் பாதுகாக்க, பொருள் நட்டம் உள்ளிட்ட சிரமங்களை வணிகப் பெருமக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.