இந்தியாவில் தனிநபர் அல்லது குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க ஏன் தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை துடியலூரில் கடந்த1996-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலத்தை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்த 2008-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என உத்தரவிட்டார். இதை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சொத்துரிமை என்பது அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமை. மனித குலத்துக்கு குடியிருக்க கட்டாயம் வீடு தேவை. ஆனால் 130 கோடி பேர் கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. பல லட்சம் பேர் சொந்த வீடு இல்லாமல் தெருவோரங்களிலும், சாலையோரங்களிலும் வசிக்கின்றனர்.
கடந்த 2017-18–ம் ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் அளித்த விவரங்களின் அடிப்படையில் 1.14 கோடி பேர் சொந்தமாக ஒரு வீடு வைத்துள்ளனர் என்றும், 6 ஆயிரத்து 537 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சொந்தமாக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் இருந்தே மக்கள் வரி செலுத்துவதை தவிர்க்க சொந்த வீடுகளின் எண்ணிக்கையை மறைத்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாகிறது.
மத்திய அரசு தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. எனவே இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வரை தனிநபர் அல்லது குடும்பம் ஒன்றுக்குமேற்பட்ட வீடுகளை சொந்தமாக வாங்க தடை விதித்தால் என்ன?. அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் வங்கியில் டிபாசிட் செய்யலாம்.
குழந்தைகளின் எதிர்காலம் கருதி கூடுதலாக ஒரு வீடு வேண்டுமென்றால் வாங்க அனுமதிக்கலாம். அதற்கும் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக 3-வது வீடு வாங்க அனுமதிக்கக்கூடாது. இதனால் விலை குறைந்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமானதாக இருக்கும்.
விளைநிலங்களும், விவசாயமும் காக்கப்படும். எனவே 2-க்கும்மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பவர்களின் வருமானம் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து புலன் விசாரணை செய்ய வேண்டும். இந்த வழக்கில் மத்திய வீட்டு வசதி அமைச்சகம், நிதியமைச்சகம் ஆகியோரையும் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம்.
இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் உள்ளது. எத்தனை குடும்பங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்துள்ளன?. மக்கள்தொகைக்கேற்ப அதன் விகிதாச்சாரம் என்ன?. அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு எப்போது முடிக்கும்?. இந்த திட்டம் முழுமையடையும் வரை இந்தியாவில் தனிநபர் அல்லது ஒரு குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்க ஏன் தடை விதிக்கக்கூடாது?.
கூடுதல் வீடுகள் வாங்குவதை தடுக்க ஏன் முத்திரைத்தாள், சொத்துவரி என அனைத்துக்கும் கூடுதலாக கட்டணம் விதிக்கக்கூடாது?
அதேபோல ஒன்றுக்குமேற்பட்ட வீடுகள் வாங்க கடன் கொடுக்கக் கூடாது என வங்கி மற்றும் நிதிநிறுவனங்களுக்கு ஏன்தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் மார்ச் 6-க்கு தள்ளி வைத்துள்ளனர்.