தமிழகம்

2019-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக தமிழகத்தில் 1.20 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

செய்திப்பிரிவு

தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர் தெரிவித்தார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல அளவிலான சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தின் முடிவில் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 2016-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிலே விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. அப்போது, விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக இருந்தது. அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாகக் குறைந்தது. கடந்த 2019-ம் ஆண்டு விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்துள்ளது.

2030-ல் பூஜ்ஜியம் இலக்கு

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 2016-ம் ஆண்டு விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 870-ஆக இருந்தது. இது, 2019-ம் ஆண்டு 375 ஆக குறைந்தது.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை முற்றிலும் பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 3 கோடி வாகனங்கள் உள்ளன. இதில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும், கார்களில் 'சீட்' பெல்ட் அணியாமல் பயணம் செய்யக்கூடாது. மதுபோதையில் வாகனம் ஓட்டியது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியவர்கள் என 1 லட்சத்து 20 ஆயிரம் பேரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை கடந்த ஆண்டு ரத்து செய்துள்ளோம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளினால் 40சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விபத்து நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை விரைவாக கிடைப்பது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் சிமுலேட்டர் மூலம் ஓட்டுநர் தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT