தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் சார்பில், ‘அகிலம் போற்றும் ஆலயம்’ என்றசிறப்பு புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோயிலின் சிறப்புகளைக் கூறும் கட்டுரைகள், அரிய படங்களுடன் ‘அகிலம் போற்றும் ஆலயம்’ என்ற 68 பக்கங்கள் கொண்ட சிறப்பு புத்தகம் தஞ்சாவூர் பதிப்பு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இன்று (பிப்.5) இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தப் புத்தகத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும், வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையில் சோழர்கள் ஆட்சிக்காலம், நிர்வாகம் உள்ளிட்டவை குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சிறப்புப் புத்தகம் வெளியீட்டு நிகழ்வு தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை தஞ்சாவூர் மாவட்டமுன்னாள் ஆட்சியரும், குடமுழுக்கு விழாக் குழுவின் உயர்மட்டக் குழு உறுப்பினருமான டி.கங்கப்பா பெற்றுக் கொண்டார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் துணை மேலாளர் (விளம்பரம்) ப.கெளசிக், முதுநிலை நிர்வாக விளம்பர அலுவலர் த.அருண்குமார், கர்நாடகாவைச் சேர்ந்த மாணிக்கம் ஆதப்பக் கவுண்டர் ஆகியோர் உடனிருந்தனர்.