நட்சத்திர ஓட்டல் ரூ.165 கோடிக்கு விற்பனைக்கு வந்திருப்பதாகக் கூறி கேரள தொழிலதிபரிடம் மோசடி செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பின்னணி குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டல் ரூ.165 கோடிக்கு விற்பனைக்கு வந்திருப்பதாக கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவரை நேரில் சந்தித்தும் பேசினர்.
இதையடுத்து, அந்த தொழிலதிபர் ஓட்டலை வாங்கும் எண்ணத்துடன் தனது மேலாளர் ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரை 3 பேரும் வரவேற்று, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர். அந்த ஓட்டலிலேயே அறை எடுத்து அவரை தங்க வைத்தனர்.
ஓட்டல் விற்பனை குறித்து 3 பேரும் அவரிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டலை ரூ.165 கோடிக்கு முடித்துக் கொடுத்தால் தங்களுக்கு கமிஷனாக ரூ.10 கோடி தரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கேரளாவுக்குச் சென்ற மேலாளர் சமீபத்தில் மீண்டும் அந்த நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். 3 பேரும் 2-வது கட்டமாக அவருடன் பேச்சு நடத்தினர்.
அவர்கள் மூவரும் அறையில் பேசிக்கொண்டு இருக்க, தொழிலதிபரின் மேலாளர் மட்டும் தனியாகச் சென்று, ஓட்டலின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்த்தார்.
அப்போது, அந்த நட்சத்திர ஓட்டலின் உரிமையாளர் அங்கு வந்துள்ளார். மேலாளர் ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்துக்கொண்டே வந்ததால் சந்தேகம் அடைந்த அவர் இதுபற்றி அவரி டம் விசாரித்தார்.
அவர்தான் உரிமையாளர் என்பதை அறியாத மேலாளரும் ஓட்டலை விலைக்கு வாங்க வந்திருப்பதாகவும் அதற்காகவே சுற்றிப் பார்ப்பதாகவும் ஓட்டல் அறையில் இதுசம்பந்தமான பேச்சு வார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர், அந்த 3 பேர் தங்கியிருந்த அறையை மூடி, உள்ளேயே அவர்களை சிறை வைத்தார். வடபழனி போலீஸாருக்கு உடனே தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து, ஓட்டல் அறையை திறந்தனர். தப்ப முயன்ற 3 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருணாகரன், அவரது கூட்டாளிகள் பரமானந்தம், தட்சிணாமூர்த்தி என்பது விசாரணையில் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
‘நட்சத்திர ஓட்டல் விற்பனைக்கு வந்திருப்பதாகக் கூறி கேரள தொழிலதிபரை ஏமாற்ற முயன்ற 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அவர்கள் மோசடியில் ஈடுபட்டது இதுதான் முதல் முறையா, அல்லது ஏற்கெனவே வேறு தொழிலதிபர்களை இதுபோல் ஏமாற்றி பணம் பறித்துள்ளனரா, இவர்களது பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என்று வடபழனி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.