தமிழகம்

அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் சென்னையில் இருந்து மாற்றப்படாது: வைகோ கேள்விக்கு பியூஷ் கோயல் பதில்

செய்திப்பிரிவு

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரிய தலைமையகம் சென்னையில் இருந்து இடமாற்றம் செய்யப்படாது என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்தார்.

சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகத்தை நாக்பூர் அல்லது ஜபல்பூருக்கு மாற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த ஜனவரி 28-ம் தேதி விரிவான செய்தி வெளியானது.

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியும், அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான பிரபா தேவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பேசினார்.

அவர் பேசும்போது, ‘‘இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், கணினிகளின் வழியாகவே மேல்முறையீடு செய்ய முடியும். எனவே, தலைமையகத்தை இடம் மாற்றுவதற்கான தேவை இல்லை. உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்ற நிலையில், சென்னையில் இருக்கின்ற அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வேறு மாநிலத்துக்கு மாற்ற முயற்சிப்பது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது" என்றார்.

திமுக வலியுறுத்தல்

அதேபோல் மக்களவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் முயற்சியில் சென்னையில் அமைக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகத்தை இடம் மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்றார்.

மாநிலங்களவையில் இதற்கு பதிலளித்து பேசிய மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘‘அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது என்று தமிழக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. தேவைப்படும் இடங்களில் மேலும் புதிய கிளைகளை அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT