தமிழகம்

சுதந்திர தினத்தில் மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சுதந்திர தினத்தில் மதுவிலக்கு தொடர்பாக தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணி செயற்குழு கூட்டம் அடையாரில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுதல், சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராட்டங்கள் நடத்துவது, பெண்களுக்கு இலவச வழிகாட்டுதல் மையம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்குவது உட்பட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். இதில், மாநில மகளிர் அணி தலைவி மகேஸ்வரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் மதுவுக்கு எதிராக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இனியும் தமிழக அரசு மவுனம் காக்கக்கூடாது. சுதந்திர தினவிழாவில் மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும். முதல்கட்டமாக வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இருக்கும் மதுகடைகளை எடுக்க வேண்டும்.

நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் தலையிட்டு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேசி முடிவு காண வேண்டும். கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் மீனவர்களின் 30 படகுகளை சேதப்படுத்தி, 2 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எனவே, மத்திய உள்துறை அமைச்சர் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுவுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய தமிழகம் நலன்சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஜி.கே.வாசன் பேசினார்.

SCROLL FOR NEXT