சிதலமடைந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த, 50 ஆண்டுகள் பழமையான வணிக வளாகத்துக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பவர் ஹவுஸில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 அடுக்கு மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த வணிக வளாகத்தில் ஆரம்பத்தில் 208 கடைகள் இருந்தன. கட்டிடம் சிதலமடைந்து வந்ததால் 2-வது தளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது, தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 111 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் காய்கறி, மளிகை கடைகள், மருந்தகம், நியாய விலை கடை உள்ளிட்டவை உள்ளன.
கட்டிடம் சிதலமடைந்து வருவதால் கடைகளைக் காலி செய்யும்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன்பு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், வியாபாரிகள் காலி செய்யவில்லை.
இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை 9 மணியளவில் வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணிகளைத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, போலீஸார் சமாதானப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், கடைகளை காலி செய்து அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கட்டிடம் மிகவும் சிதலமடைந்து உள்ளது. மெட்ரோ ரயில் பணிக்காக ஆற்காடு சாலையில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற உள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழக் கூடிய அபாயம் உள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கட்டிடத்துக்கு சீல் வைத்துள்ளோம். விரைவில் இந்தக் கட்டிடத்தை இடிக்க உள்ளோம்" என்றார்.