5-வது, 8-வது பொதுத்தேர்வு ரத்து என அறிவித்த தமிழக அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, உறுதியாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:
“பிஞ்சுப் பருவத்திலேயே மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடக்கம் முதலே கடுமையாக வலியுறுத்தியது திமுக.
டெல்லி எஜமானர்களின் கைப்பாவையாக உள்ள அதிமுக ஆட்சியாளர்கள் அதற்குச் செவிமடுக்க மறுத்து அமைதி காத்தது மட்டுமின்றி - ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத்தேர்வு உண்டு என அரசாணை பிறப்பித்தனர்.
தற்போது திடீர் 'ஞானோதயம்' ஏற்பட்டது போல பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளனர். இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்டிட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று இலங்கையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாததற்கும் கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு:
“இன்று இலங்கை சுதந்திர தினத்தில், வழக்கமாக இசைக்கப்பட்டு வந்த முறையின்படி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டிருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை அதிபரின் "சிங்களப் பேரினவாதத்திற்கு" தமிழ் மொழியும், தமிழர்களின் உணர்வும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது
இந்தியா வந்த இலங்கை அதிபரை வரவேற்று, நிதியுதவியும் அறிவித்து பிரதமர் நரேந்திர மோடி வழியனுப்பி வைத்தது இலங்கையில் வாழும் தமிழர்களின் கண்ணியத்தைச் சிதைத்து- சிங்களவர்களுக்கு அடிமைகளாக்குவதற்கா? என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, "இலங்கை சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாததற்கு இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து, கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.