எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறக்கோரி திண்டுக்கல், பழநி ஆகிய நகரங்களில் எல்.ஐ.சி., ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் பரத் தலைமை வகித்தார். எல்.ஐ.சி., திண்டுக்கல் கிளையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எல்.ஐ.சி., பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல், பழநியில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய எல்.ஐ.சி., ஊழியர்கள் சங்க பழநி கிளை தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
எல்.ஐ.சி., ஊழியர்கள், முதுநிலை அதிகாரிகள், வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எல்.ஐ.சி., பங்குகளை விற்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திண்டுக்கல், பழநியிலுள்ள எல்.ஐ.சி., கிளையில் பணிபுரியும் ஊழியர்கள் பகல் 12 மணி முதல் 1 மணி வரை அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது.