தமிழகம்

லிங்கத்தூர் அரசுப் பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பித்ததால் 1 மணி நேரம் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்த 3 மாணவர்கள்

க.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டம் லிங்கத்தூர் அரசுப் பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பித்த 3 மாணவ, மாணவிகளுக்கு நேற்று தலா ஒரு மணி நேர தலைமை ஆசிரியர் பொறுப்பை வழங்கி தலைமை ஆசிரியர் கவுரவித்தார்.

கரூர் மாவட்டம் லிங்கத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியராக கு.பரணிதரன் பணியாற்றி வருகிறார்.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை முடித்து, திங்கள்கிழமை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக, 4, 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் 9-வது வாய்ப்பாடு வரை படித்துவந்து, தடையின்றி ஒப்பித்தால், அவர்களுக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பதவி வழங்கப்படும் எனஜன. 31-ம் தேதி தலைமை ஆசிரியர் கு.பரணிதரன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, 2 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வாய்ப்பாடு ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.

இதில், 4 மற்றும் 5-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் செ.ஜனனி, சு.லோகேஷ், சொ.சத்யப்ரியா ஆகிய 3 பேர் வாய்ப்பாடுகளை தடுமாறாமல் ஒப்பித்தனர்.

இதையடுத்து, 3 பேருக்கும் தலா ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கினால் பள்ளி நிர்வாக பணிகள் பாதிக்கப்படும் என்பதால், 3 பேருக்கும் தலா ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்க கு.பரணிதரன் முடிவு செய்தார். அதன்படி, நேற்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை செ.ஜனனி, பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை சு.லோகேஷ், பிற்பகல் 3 மணி முதல் 4.10 மணி வரை சொ.சத்யப்ரியா ஆகிய 3 பேர் நேற்று தலைமை ஆசிரியர் பொறுப்பு வகித்தனர்.

அந்த நேரத்தில் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து மாணவ, மாணவிகளின் குறிப்பேடுகளை ஆய்வு செய்தனர்.

இனி வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பாடங்களி லிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் கு.பரணிதரன் தெரிவித் தார்.

SCROLL FOR NEXT