தஞ்சாவூர் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், குடமுழுக்கு விழாக் குழுத் தலைவர் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மணியரசன் கூறியதாவது: யாகசாலை மண்டபத்தில் ஓதுவார்களுக்கு உரிய இடம் வழங்கவில்லை. ஓதுவார்கள் யாகசாலை மண்டபத்தில் அமர்ந்து தமிழ் மந்திரங்களை உச்சரிக்க அனுமதிக்க வேண்டும்.
உயர் நீதிமன்றம் கூறியபடி கோயில் நிர்வாகம் நடந்துகொள்ளவில்லை. கடந்த இருதினங்களாக தமிழில் மந்திரங்களை உச்சரிக்கவில்லை. கருவறை முதல் கலசம் வரை தமிழ் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.
அதேபோல, தென்னக கலை பண்பாட்டு மையத்தினரும் வெளிமாநில பாடல்களுக்கும், கலைகளுக்குமே முக்கியத்துவம் தருகின்றனர். தமிழக கலைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என அந்த நிர்வாகத்தையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளோம்.
தமிழ் மந்திரங்கள் பெரிய கோயில் மட்டுமில்லாமல், தமிழகத்தில் நடைபெறவுள்ள எல்லா கோயில் குடமுழுக்கு விழாவிலும் இனி ஒலிக்க வேண்டும் என்பதற்காக, இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தமிழ் மந்திரங்கள் அடங்கிய புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க உள்ளோம். இதற்கான நிதியுதவியை வெளிநாட்டுகளைச் சேர்ந்த தமிழர்கள் வழங்கியுள்ளனர் என்றார்.