மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக 8 வாரத்தில் முடிவெடுக்க தமிழகவருவாய்த் துறை ஆணையருக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ.தளபதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 1969 முதல் 2011வரை 5 முறை முதல்வராக இருந்தவர் மு.கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7-ல் தனது 94-வதுவயதில் காலமானார்.
மதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க 2018 செப்டம்பரில் மனு அளித்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை. மதுரையில் ஆளும்கட்சியின் தலைவர்களுக்கு சிலை வைக்க அனுமதிவழங்கும் மாவட்ட நிர்வாகம், கருணாநிதி சிலை வைக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை.
எனவே, மதுரை சிவகங்கை சாலை பால்பண்ணை சந்திப்பு அல்லது மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரவுண்டானா சந்திப்பில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரையில் கருணாநிதி சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்க முடியாது. வருவாய்த் துறை ஆணையரே முடிவெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வருவாய்த் துறை ஆணையரை எதிர்மனுதாரராகச் சேர்க்கிறது என்று நீதிபதி தெரிவித்தார். சிலைஅமைப்பது தொடர்பாக வருவாய்த்துறை ஆணையர் விதிமுறைகளின் அடிப்படையில் பரிசீலித்து 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.