தமிழகம்

மக்களை பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம்; ஆன்லைன் மூலம் குறைந்த விலையில் சினிமா டிக்கெட்: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

செய்திப்பிரிவு

மக்களை பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஆன்லைனில் விரைவில் சினிமா டிக்கெட் வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

திரைப்பட டிக்கெட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், வணிகவரித் துறைச் செயலர் கா.பாலச்சந்திரன், செய்தித் துறைச் செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் பொ.சங்கர், நில நிர்வாக இணை ஆணையர் ஆர்.பூவராகவன், மாநில மின் ஆளுமை உறுப்பினர் எம்.சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் டி.என்.டி. ராஜா, உட்லண்ட்ஸ் வெங்கடேஷ், வி.டி.எல். சுப்பு, ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி உள்ளிட்டோரும் உள்துறையின் சினிமா பிரிவு துணைச் செயலாளர் குணசேகர், செய்தித் துறை கூடுதல் இயக்குநர் உல.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக கொள்கை முடிவெடுத்து அறிவித்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், உள்துறை, வணிகவரித் துறை, செய்தித் துறைச் செயலர்கள் பங்கேற்று மின்னாளுமை முகமை மூலம் ஆன்லைன் டிக்கெட் வழங்குவது குறித்து ஆலோசித்தோம். அதே வழியில், இன்றும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இறுதி முடிவை எட்டும் நிலைஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்களை பாதிக்காத வகையில்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கமுடியுமா என்பதை ஆலோசித்தோம். திரையரங்கு உரிமையாளர்கள் ‘புக் மை ஷோ’ உள்ளிட்டநிறுவனங்களுடன் ஒப்பந்தம்செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

ஒப்பந்தம் செய்தவர்கள் அதைத் தொடரலாம். செய்யாதவர்கள் அரசின் ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் சேர்ந்து கொள்ளலாம்.திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்களை பாதுகாப்பது போல், மக்களையும் பாதுகாக்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் வழங்கப்படும்போது ஒரு திரைப்படத்தின் தன்மையும் வெளிப்படும். சினிமாத் துறை பற்றிய வெளிப்படைத்தன்மையை இதில் அறிந்து கொள்ள முடியும். அடுத்த கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும்.

சாதாரண கட்டணம், மக்கள் விரும்பும் கட்டணத்தை நாங்கள் நிர்ணயிக்க உள்ளோம். ஒரே சர்வர் மூலம் தமிழகம் முழுவதும் திரையரங்கத்தில் வசூல் குறித்த தகவல் கிடைப்பதன் மூலம், திரைத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படும். விரைவில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்.

சிறப்பு காட்சிகள், தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் மிகப்பெரிய நடிகர்களின் படங்களுக்கு சிறப்பு கட்டணங்கள், மக்களை பாதிக்காத வகையில் சிறப்பு காட்சிகளுக்கு கட்டணம்நிர்ணயிக்கப்படும். திரையரங்கில்வாகன நிறுத்த கட்டணமும் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய திரைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இணைந்து ஒத்துழைத்தால்தான் கட்டுப்படுத்த முடியும். திருட்டு விசிடி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான சட்டமும் நடைமுறையில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT