தமிழகம்

அரசியலமைப்பு சட்டத்தை மீறி பேசிய ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தமிழக ஆளுநரிடம் திமுக மனு அளிப்பு

செய்திப்பிரிவு

அரசியலமைப்புச் சட்டத்தை மீறி பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் எழுதிய கடிதத்தை எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆளுநர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் நேற்று வழங்கினார்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ‘எல்லாம் மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் அயோக்கியர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒருசாரார் தப்பு செய்தால் அதைக் கண்டிப்பதும், ஒருசாரார் தப்பு செய்தால் அதைக் கண்டிக்காமல் இருப்பதும் திமுகவின் வாடிக்கையான நிலைப்பாடாக இருக்கிறது.

இஸ்லாமிய இயக்கங்களை உருவாக்கும் நோக்கத்தோடு சில அரசியல் கட்சிகள் இதை கையில் எடுத்து அரசியல் செய்தால், ஒருபுறம் இந்து பயங்கரவாதம் உருவாவதை தடுக்கமுடியாது. ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு இயக்கம் இருக்கிறது.

புதுடெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் பிரச்சினை என்று சொன்னால் அதற்குப் பின்னால் காங்கிரஸ் இயக்கம் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு பிரச்சினை நடக்கிறது என்று சொன்னால், அதற்குப் பின்னால் திமுக இருக்கிறது. இதை கண்டிக்கிறோம் அதற்கு ஆதாரமும் இருக்கிறது.

வன்முறை சம்பவத்தைத் தூண்டிவிட்டு, அதில் சிறுபான்மை இஸ்லாமிய ஓட்டுகளை வாங்குவதற்காக பெரும்பான்மையான இந்துக்களை பலி கொடுக்கும் நிலையை திமுக கையில் எடுத்து இருக்கிறது. அதைத் தடுக்கிற பணியில் நாங்கள் இருக்கிறோம்’ என பேசியுள்ளார்.

எனவே, அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசுவதுடன், மக்களை மதரீதியாகத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT