தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அரசு மருத்துவமனைகளில் 8 சீனர்கள் உட்பட 13 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காய்ச்சல் சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து கேரளா வந்த 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழு மூலம் (கரோனா வைரஸ் பாதிப்புள்ள சீனா உள்ளிட்ட)வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகம் வந்த 7,842 பேரை பரிசோதனை செய்ததில், 1,150 பேரை தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 272 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் 8 சீனர்கள் உட்பட 10 பேரும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவரும், ராமநாதபுரத்தில் ஒருவரும், விழுப்புரத்தில் ஒருவர் என மொத்தம் 13 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 10 பேரை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது செயலாளர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமி, மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ள 12 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஒருவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். இவர்கள் தவிர மேலும் 4 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் முடிவுகள் வரும்” என்றார்.