புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், உரிய சிகிச்சை மேற்கொண்டு முழுமையாக குணமடையலாம். புற்றுநோய் குறித்த அச்சம் தேவையற்றது; இதுகுறித்த விழிப்புணர்வுதான் அவசியமானது என்றுகோவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பி.குகன் கூறினார்.
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2000-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பிப்.4-ம் தேதியை உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அறிவித்து, தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் டாக்டர் பி.குகன் கூறியதாவது: இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது உள்ளதைப்போல இன்னும் 20 ஆண்டுகளில் இருமடங்கு புற்றுநோய் தாக்கம் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 1,300 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். 2012 முதல் 2014-ம் ஆண்டுகளில் மட்டும் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்தது. 2018-ல் ஏறத்தாழ 11.50 லட்சம் நோயாளிகள் புதிதாக கண்டறியப்பட்டனர். சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர். ஏறத்தாழ 22.50 லட்சம் பேர் புற்றுநோயுடன் வாழ்ந்துவருகின்றனர். நம் நாட்டில் மார்பகம், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய், இரைப்பை, நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்தான் அதிகம்.
உலக சுகாதார நிறுவனம் நடப்பு ஆண்டு `I am and I will' (என்னால் முடியும்) என்ற பிரகடனத்துடன் புற்றுநோய் விழிப்புணர்வுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளின் மனிதர்களின் சராசரி ஆயுளை 10 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம்முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.இதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம்.
திடீர் அறிகுறிகள்
மருக்கள் பெரிதாவது, திடீரென உடல் எடை குறைவது, 10, 15 நாட்களாகியும் காய்ச்சல் குணமாகாதது, நீண்ட நாட்களாக சளி, இருமல் நீடிப்பது, மல ஜலம்கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது, குரல்வளையில் மாற்றம் ஏற்படுவது உள்ளிட்டவற்றை புற்றுநோய் உருவாகும் எச்சரிக்கை அறிகுறிகளாக கொள்ளலாம். அதேசமயம், இந்த அறிகுறிகள் புற்றுநோயை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவை அல்ல.
இந்தியாவில் நகர்ப்புறங்களில் மார்பகப் புற்றுநோய் தாக்கமும், கிராமப்புறங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்கமும் அதிகம்உள்ளது. எனவே, பெண்கள் மேமோகிராம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அதேபோல, ஆண்கள் ப்ராஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.குடல் புற்றுநோயை கொலனோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டுஅறியலாம்.
புற்றுநோயைப் பொருத்தவரை நோயாளியின் தன்மை, நோயின் தீவிரத்தைப் பொருத்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பாரம்பரியமாக வரும் புற்றுநோயைத் தவிர்க்க முடியாது என்றாலும், சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவை மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம். துரிதஉணவு, அதிக வண்ணம் சேர்க்கப்பட்ட உணவு, பல நாட்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட உணவு, கொழுப்பு மிகுந்த உணவு, புகையிலை, புகைப்பழக்கம், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். மிதமான உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்.
படித்தவர்களிடம்கூட போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், பாமர மக்களின் நிலை? எனவே, அரசு, மருத்துவமனைகள், தன்னார்வ அமைப்புகள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வை ஓர் இயக்கமாக கொண்டுசெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.