படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் தேரோட்டம்: 'அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்தனர்.

அறுபடைவீடுகளில் முதற் படைவீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதியுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை முன்னிட்டு காலை, மாலை வேளைகளில் ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி முருகன், தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கபட்ட திருத்தேரில் சுவாமி முருகபெருமான், தெய்வானையுடன் வைக்கப்பட்டு 16 கால் மண்டபத்தில் இருந்து தொடங்கி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

இவ்வைபவத்தில் ஆண்கள் பெண்கள் எனத் திரளாக வந்து அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் வருகிற 8-ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டு வருகிறது.

SCROLL FOR NEXT