மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள், அரசு கட்டிடங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற தலைவர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனை மத்திய, மாநில அரசுகள் தாமதப்படுத்துகின்றன. இதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை. மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டப்படுவது அனைத்து வகைகளிலும் பொருத்தமானதாக இருக்கும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 108-வது பிறந்தநாள் விழா மற்றும் 53-வது குருபூஜை வரும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அன்று இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.