சென்னை மாநகராட்சி வாங்க உள்ள குப்பைகளை குழாய்கள் மூலம் உறிஞ்சும் நவீன இயந்திரம். 
தமிழகம்

சுகாதாரமான முறையில் குப்பைகளை அகற்ற 15 நவீன இயந்திரங்களை வாங்கும் சென்னை மாநகராட்சி: தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடவடிக்கை

ச.கார்த்திகேயன்

சுகாதாரமான முறையில் குப்பைகளை அகற்ற தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.9 கோடி செலவில் 15 நவீன குப்பை அகற்றும் வாகனங்களை வாங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து 4 ஆயிரம் மூன்று சக்கரமிதிவண்டிகள் மூலமாக குப்பைகள் பெறப்பட்டு, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள 14,500குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. அவை 370 காம்பாக்டர் வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு குப்பை மாற்றும் இடங்களில் கொட்டப்படுகின்றன.

அங்கிருந்து லாரிகள் மூலமாக பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குப்பைகளை உரமாக்கும் மையங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

இதுநாள் வரை துப்புரவு பணியாளர்கள், குப்பைகளுக்கு மிக அருகில் சென்று, அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டு அவற்றை அகற்றி வந்தனர். இந்நிலையில், அவர்கள் சுகாதாரமான முறையில் குப்பைகளை அகற்ற ஏதுவாக, குப்பைகளை குழாய்கள் மூலம்உறிஞ்சி அகற்றும் இயந்திரங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் பல இடங்களில் பொதுமக்கள் முறையற்ற வகையில் வீசி எறியும் குப்பைகளால், குப்பைத் தொட்டிகளைச் சுற்றி அதிக அளவில் குப்பைகள் இறைந்து கிடக்கின்றன. மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், இரு குடியிருப்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கழிவுநீரோடு சேர்ந்து குப்பைகளும் கிடக்கின்றன. இதனால் பல்வேறு சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன.

மேலும், மின் இணைப்பு பெட்டிகள் மற்றும் மின் மாற்றிகளின் கீழும் பொதுமக்கள் குப்பைகளை வீசி எறிகின்றனர். கால்வாய்க்கரை பகுதிகளிலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இவற்றை பாதுகாப்பான உபகரணங்களோடு கைகளால் அகற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இதைக் கருத்தில்கொண்டு, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், ரூ.9 கோடியே 59 லட்சம் செலவில், குழாய்கள் மூலம் குப்பைகளை உறிஞ்சி அகற்றும் 15 நவீன இயந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களைக் கொண்டு, குப்பை அகற்றும் பணி தனியாரிடம் அளிக்கப்படாத மண்டலங்களான தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் உள்ள குப்பைகள் எளிதாக, சுகாதாரமான முறையில் அகற்றப்பட உள்ளன.

SCROLL FOR NEXT