சென்னையில் ஆட்டிறைச்சி விலைஅடிக்கடி உயர்வதைக் கண்டித்துதிருவல்லிக்கேணி உள்ளிட்ட ஒருசில இடங்களில் ஆட்டிறைச்சிக் கடைக்காரர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சென்னையில் உள்ள ஆட்டிறைச்சி கூடங்களுக்கு நெல்லூர், மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்படுகின்றன. ஆடுகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுவதால், சில நேரங்களில் மொத்த விலை உயர்கிறது. இதனால் வியாபாரம் செய்ய முடியவில்லை என சில்லறை விற்பனை இறைச்சிக் கடைக்காரர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவல்லிக்கேணி ஜாம்பஜார், ஐஸ் ஹவுஸ், ஆதாம் மார்க்கெட், அடையார், கொட்டிவாக்கம் போன்றபகுதிகளில் சில்லறை விற்பனைஇறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமையான நேற்று சில இடங்களில் இறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்டதால், அப்பகுதி பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுதொடர்பாக சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் சபீர் அகமது கூறியதாவது:
புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தில் கடந்த மாதம் ஆட்டிறைச்சி மொத்த விலை கிலோ ரூ.700 வரை உயர்ந்தது. அடுத்தசில தினங்களில் ரூ.580 வரைகுறைந்தது. பின்னர் மீண்டும்உயர்ந்து, மீண்டும் குறைந்தது. இந்நிலையில் திடீர் விலையேற்றத்தை கண்டித்து ஆட்டிறைச்சி சில்லறை விற்பனையாளர்கள், 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.
அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பல சங்கங்கள், ஆட்டிறைச்சி விலை தற்போது குறைந்திருப்பதால், போராட்டம் தேவையற்றது எனத்தெரிவித்தனர். சென்னை ஆட்டிறைச்சி சில்லறை விற்பனையாளர் சங்கம் மட்டும் ஜனவரி 30, பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இதன்படி, நேற்று ஒருசில இடங்களில் மட்டும் இறைச்சிக் கடைகள் அடைக்கப்பட்டன. அதனால் 20 சதவீத பாதிப்பு ஏற்பட்டது.