தமிழகம்

திருவள்ளூர் அருகே துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த 8 பேர் கைது: பறவை, விலங்குகளை வேட்டையாட தங்கியிருந்ததாக தகவல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே பறவை, விலங்குகளை வேட்டையாட பதுங்கியிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 2 கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர் அருகே உள்ள வலசைவெட்டிக்காடு பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் மர்ம மனிதர்கள் தங்கியிருப்பதாக பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் வலசைவெட்டிக்காடு பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த அருள்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் 8 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது.

சென்னையில் உள்ள துப்பாக்கி சுடுவோர் சங்க உறுப்பினர்களான காஞ்சிபுரம் மாவட்டம், கப்பாங்கோட்டூரை சேர்ந்த சுனில் கருணாகரன் (39), சென்னை, சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாபு(51), சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ்(48), வலசைவெட்டிக்காடு அருள்குமார்(25), அயனாவரம் சிலம்பரசன்(30), கொரட்டூர் பூபாலன்(31), மாம்பாக்கம் ஞானமூர்த்தி(27), செங்கல்பட்டு மாவட்டம் தங்கராஜ்(35) ஆகிய அந்த 8 பேரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

4 துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்

அந்த விசாரணையில், 8 பேரும் வயல்வெளிகளில் செல்லும் பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடி, சமைத்து சாப்பிடுவதற்காக பதுங்கியிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மணவாளநகர் போலீஸார் 8 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து, 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள், 7 டார்ச் லைட்கள், கத்திகள், 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT