தமிழகம்

நெசவாளர் விருதுக்கான தேர்வில் வெளிப்படை தன்மை: நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மத்திய அரசு நெசவாளர்களுக்கு வழங்கும் விருதுக்கான தேர்வில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

மத்திய ஜவுளித்துறை சார்பில் தேசிய கைத்தறி தின விழா கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தார். நெசவுத் தொழிலில் தொடர்புடைய 74 பேருக்கு விருதுகளை வழங்கினார். மேலும் நெசவாளர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அந்த நிகழ்வில் நெசவாளர்களுக்கான புதிய அறிவிப்புகள் இல்லை; விருதுக்கான தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று நெசவாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியூ) மாநில பொதுச் செயலர் ஏ.முத்துகுமார் கூறியதாவது:

ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வில் தேசிய கைத்தறி தின அறிவிப்பு மட்டுமே புதியது. தொழிலாளர்களுக்கான விபத்துக் காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.

ஏற்கெனவே மத்திய அரசின் வட்டி மானியம், கடன் தள்ளுபடி மானியம் ஆகியவற்றை வங்கிக் கணக்கு மூலமாக பெற்று வரும் நிலையில், எல்லா மானியமும் வங்கிக் கணக்கு மூலமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவிக்கிறார்.

கைத்தறி குழுமத்துக்கான நிதி ரூ.60 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். குறைந்தபட்சம் 1000 உறுப்பினர்களைக் கொண்ட, பதிவுபெற்ற குழுமத்துக்கே அது பொருந்தும். அத்தகுதி யுடைய குழுமம் தமிழகத்தில் இல்லை.

நெசவாளரின் வறுமை ஒழிக்கும் திட்டம், வீடு வழங்கும் திட்டம், வேலைக்கு ஏற்ற கூலி சட்டம், பஞ்சப்படி, சமூக பாதுகாப்பு சட்டம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சேலை நெய்யும் நெசவாளிக்கு கூலி மற்றும் விற்பனை செய்யப்படும் சேலையில் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதத்தை வழங்கும் நடைமுறை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ளது. தனியாரில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதை முறைப்படுத்தும் அறிவிப்பும் இல்லை.

விருது பெற்றுள்ளவர்களில் பலர் சேலை வடிவமைப்பாளர்கள். நெசவு செய்பவர்கள் மட்டுமே நெசவாளர்கள். நெசவாளர் விருது என்றால் அவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். வடிவமைப்பாளர்களுக்கு என்று தனி விருது வழங்குவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

இந்த விருதுகளுக்கான தேர்வு எந்த அளவுகோலில் நடைபெறுகிறது என்பதும் தெரியவில்லை. இத்தேர்வில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT