அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி கட்சித் தலைமை வற்புறுத்துகிறது. என் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று மாநிலங்களவையிலேயே அதிரடி காட்டியவர் சசிகலா புஷ்பா. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாநகராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தார். 2014-ம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவி வகித்து வருகிறார். இவரின் பதவிக் காலம், ஏப்ரல் 2020-ல் முடிவடைகிறது.
டெல்லி விமான நிலையத்தில் எழுந்த வாக்குவாதத்தால், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவைத் தாக்கியதின் பேரில் சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற மோடியின் தலைமை தேவை என்று பாஜகவுக்கு ஆதரவாக சசிகலா புஷ்பா முன்பு பேசியிருந்த நிலையில், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சசிகலா புஷ்பாவின் வருகை தமிழக பாஜகவை வலுப்படுத்தும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜகவைப் பலப்படுத்தும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது.