தமிழகம்

ராகிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வு: கல்லூரி முதல்வர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

செய்திப்பிரிவு

கல்லூரிகளின் விளம்பர பலகையில் ராகிங் கண்காணிப்பு குழு விவரங்கள், தண்டனைகள் குறித்த அறிவிப்பை வைக்கவேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க மாநில அளவில் ஆளுநர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர்கள் தலைமையிலும் தமிழக அரசு கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளது. சென்னையில் ராகிங்கை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அலுவலர், மூத்த பத்திரிகையாளர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி, மருத்துவம், பொறியியல், கலை மற்றும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவியர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ராகிங் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி பேசியதாவது:

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். ராகிங் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 போன்ற விவரங்களை மாணவர்கள் அறியும் வகையில், கல்லூரி விளம்பரப் பலகையில் வைக்க கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வருவாய் அலுவலர் அழகுமீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT