தமிழகத்தின் சமூக சீர்திருத்தங்களுக்கு வள்ளுவர், பெரியார், காமராஜர் போன்றவர்களே மூலக்காரணம் என்றும், அவர்களது காலம் தொட்டே சீர்திருத்தங்கள் தமிழகத்தில் இருந்து வருவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னையில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் முதலாமாண்டு நினைவு சொற்பொழிவு உயர் நீதிமன்ற கலையரங்கில் நடந்தது. இந்நிகழ்வுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமை வகித்தார். மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சுதாகர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் பங்கேற்று பேசியதாவது: அரசின் நடைமுறைக் கொள்கைகள் மூலமாகவே சமூகத்தின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு சமநிலை பேணப்படுகிறது. சாதாரண குடிமகனைக்கூட நாட்டின் உயர்ந்த பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்ய முடிகிறது, பொறுப்பும் வகிக்க முடிகிறது என்றால் அதற்கு இந்த நடைமுறைக் கொள்கைகளே காரணம். ஒரு நல்லாட்சி அமைவதற்கும் இதுதான் அடிப்படை என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
அதேபோல தமிழகத்தின் சமூக சீர்திருத்தங்களுக்கு வள்ளுவர், பெரியார், காமராஜர் போன்றவர்களே மூலக்காரணம். அவர்களது காலம் தொட்டே தமிழகத்தில் சமூக சீர்திருத்தங்கள் இருந்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டதிருத்தங்கள் கொண்டு வந்தால் அதை நீதிமன்றங்கள் ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.எம்.சுந்தரேஷ், என்.கிருபாகரன், வி.பாரதிதாசன், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உட்பட பலர் பங்கேற்று பேசினர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி நன்றி கூறினார்.