தமிழகம்

வரிச் சுமையை ஏற்றாமல் மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பட்ஜெட்: முதல்வர் பழனிசாமி பாராட்டு

செய்திப்பிரிவு

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் மத்திய பட்ஜெட் அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை பாராட்டுகிறேன். உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சியை மையமாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் நிலவும் 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் அடிக்கடி பாதிக்கப்படும் தமிழகத்தில், இப்பிரச்சினை நிலவும் அனைத்து மாவட்டங்களையும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்து, அதிக நிதி ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தரிசாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது.

ரயில்வே, விமானப் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்த உள்ள கிசான் ரயில், கிரிஷி உதான் திட்டங்கள் மூலம் தடையில்லா தேசிய குளிர்பதன முறை நிறுவப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. நீர்ப்பாசனம், விவசாயத் துறைகளுக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கியதற்கு பாராட்டுகள்.

மீன் உற்பத்தி இலக்காக 2022-23 ஆண்டுக்கு 200 லட்சம் டன் நிர்ணயித்துள்ளதையும், பால் உற்பத்தி திறனை 2025-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க முடிவு செய்திருப்பதையும் மனதார பாராட்டுகிறேன்.

கீழடியிலும் மேம்பாட்டு பணி

ஆதிச்சநல்லூர் உட்பட 5 தொல்லியல் சார்ந்த இடங்களில் அருங்காட்சியகம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்திருப்பதற்கு தமிழகம், தமிழக மக்கள் சார்பில் மத்திய அரசுக்கு நன்றி. அதேநேரம், இத்திட்டத்தில் கீழடியையும் சேர்க்க வேண்டுகிறேன்.

நம் நாட்டில் மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட்போன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க இத்தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

தொழில்நுட்ப ஜவுளி வகைகள் உற்பத்தியை தரம் உயர்த்த ரூ.1,480 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இத்துறையில் சிறந்து விளங்கும் சென்னை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயர்த்த முடியும்.

புதிய தொழில்நுட்பம் தொடர்பான உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்க, 5 புதிய திறன்மிகு நகரங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இத்துறையில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் ஒரு திறன்மிகு நகரம் அமைத்து தரவேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் ரூ.100 லட்சம் கோடியில் திட்டங்கள் பட்டியலிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னை - பெங்களூரு விரைவு வழிச்சாலை விரைவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் 6 ஆயிரம் கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைப் பகுதிகளை 2024-ம் ஆண்டுக்குள் உருவாக்க திட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெய்வேலி, ஓசூர், ராமேசுவரத்தில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடியில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யவும் உரிய நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT