தமிழகம்

பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டதால் பேராசிரியை நிர்மலாதேவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

இ.மணிகண்டன்

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் -2வது முறையாக பிடி ஆணை பிறப்பித்தத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி இன்று நேரில் ஆஜரானார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி கைதுசெய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தற்போது பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட் 3 பேரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

பேராசிரியை நிர்மலாதேவி ஆஜராகவில்லை. அதையடுத்து, பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

அதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி இன்று நேரில் ஆஜரானார். பிடி ஆணையை ரத்துசெய்யக்கோரி பேராசிரியை நிர்மலாதேவி தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்ற நீதிபதி பரிமளா, போராசிரியை நிர்மலாதேவி மீதான பிடி ஆணையை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணைக்கு தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் பேராசிரியை நிர்மலாதேவியை நீதிபதி பரிமளா அறிவுறுத்தினார்.

இவ்வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஏற்கனவே இம்மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT