ஒரே நாடு ஒரு குடும்ப அட்டை திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் முறை தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வந்திருந்த ரவிச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் பகுதியிலிருந்து வந்திருந்த திருப்பதி ராஜ் ஆகியோருக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இத்திட்டத்தால் வேலைக்காக இடம் பெயர்ந்துள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 957 நியாயவிலை கடைகளிலும் குடிமைப் பொருட்களை வாங்கலாம்.
ஒரு வருவாய் கிராமத்தில் உள்ளவர்கள் தேவைப்பட்டால் மற்றொரு வருவாய் கிராமத்தில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் முன்னோட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தக் கடையிலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் எந்தக் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் செயல்படுத்த உள்ள இந்தத் திட்டத்தில் உள்ள இடர்ப்பாடுகளைக் கண்டறிவதற்காக தமிழ்நாட்டில் இந்த இரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ஒரு மாதம் செயல்படுத்தபடுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் எந்த பிரச்சினையும் வராதவாறு திட்டமிடப்பட்டுள்ளது. இங்குள்ள நியாயவிலை கடைகளுக்கு கூடுதலாக பொருட்கள் அனுப்பப்படும்” என்றார்.