‘‘கரோனா வைரஸ் பாதிப்பு அடைய வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 20-வது இடத்தில் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியின் ‘நம்ம மதுரை நிகழ்ச்சி’யில் சிறுவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு கிட்டத்தான் (kidathon- சிறுவர்களுக்கான நடைப்போட்டி) காந்தி மியூசியத்தில் நடந்தது. ஆணையாளர் ச.விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, போட்டியைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மதுரையை சீர்மிகு தூய்மையான நகரமாக மாற்றுவதற்கான பணியை பொதுமக்களிடமும், மாணவ, மாணவிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே 'நம்ம மதுரை' நிகழ்ச்சி மாநகராட்சி சார்பில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்படுகிறது.
மாநகராட்சியின் முயற்சியால் 40 ஆண்டு காலத்திற்குப் பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மாமதுரையை போற்ற, நம் மாமதுரையைக் காப்பாற்ற இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியமாகும். பாரம்பரியத்தை மீட்டெடுப்பதும் அவசியம்.
வைகை ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக்கூடாது. எந்தவொரு குப்பையும் கொட்டக்கூடாது. இதற்கு மாநகராட்சி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை. குறிப்பாக தமிழக மக்கள் அச்சப்படத் தேவையே இல்லை. அந்தளவுக்கு இந்த நோயை தடுக்கவும், ஒருவேளை நோய் வந்தால் சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதற்காக குடிமராமத்துப் பணிகள், நீர் மேலாண்மைத் திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது. கரோனா வைரஸ் தாக்கம் குறித்து உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த நாடு பாதிப்பு அடை வாய்ப்புள்ளது என்ற பட்டியலில் நமது இந்தியா நாடு 20-வது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என சுமார் 400 பேர் கலந்து கொண்ட, கிட்டத்தான் காந்திமியூசித்தில் இருந்து உலக தமிழ்ச்சங்கம், ராஜாமுத்தையா மன்றம் வழியாக தமுக்கம் மைதானம் சென்று அடைந்தது.
இந்நிகழ்ச்சியின்போது மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் வி.நாகஜோதி, நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.