தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக காவிரியில் இருந்து நேற்று புனித நீர் எடுத்து வரப்படுகிறது. 
தமிழகம்

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக காவிரியிலிருந்து புனித நீர்: பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்காக காவிரி ஆற்றிலிருந்து பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் பிப்.5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த 27-ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு, தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடர்ந்து, இன்று(பிப்.1) காலை 8 மணிக்கு மேல்ஏகாதச ருத்ரஜபம், ருத்ராபிஷேக பூர்வ பிரசன்னாபிஷேகம், சூர்ய அக்னி ஸங்கிரஹணம், கும்பலங்காரம், தேவதா கலா கர்ஷணம், பிற்பகல் 3 மணிக்கு மேல் இஷ்ட தானம், தச தானம், பஞ்ச தானம், யாத்ரா தானம், யாத்ரா ஹோமம், யாகசாலை பிரவேசம், மாலை 6.30 மணிக்கு மேல் முதல்கால யாக பூஜை, ஜபம், ஹோமம், பூர்ணாஹூதி,தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன.

யாகசாலை வைத்து பூஜை செய்வதற்காக நாட்டின் முக்கிய நதிகளான கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட பல்வேறு நதிகளிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நீர் கடத்தில் நிரப்பட்டு காவிரி ஆற்றின் உப நதியான வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வர் கோயிலில் வைக்கப்பட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜைகளுக்குப் பின் புனித நீர் அடங்கிய கடம் யானை மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஏந்தியபடி வந்தனர். அதனைத் தொடர்ந்து கோலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மங்கள வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க ஏராளமானோர் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.

பின்னர் கோயில் வளாகத்தில் மூலவர் சன்னதி முன்பாக கடம் இறக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் பூஜை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜாபான்ஸ்லே, குடமுழுக்கு விழாக் குழுத் தலைவர் துரை.திருஞானம் மற்றும் உபயதாரர்கள், விழாக்குழுஉறுப்பினர்கள், கோயில்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் 8 கால யாகசாலை பூஜைக் காக 110 குண்டங்கள் அமைக்கப்பட்டு உள் ளன. ஹோமத்தில் பயன்படுத்துவதற்காக ஆயிரம் கிலோ எடையிலான வெள்ளை மிளகு, நன்னாரி வேர், வலம்புரி காய், கர்சூரிக் காய், அதிமதுரம், லவங்கப்பட்டை, தேவதாரு கட்டை போன்ற 2,600 கிலா எடையுள்ள 124 மூலிகைப் பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அத்துடன் தினமும் அபிஷேகத்துக்கு பயன் படுத்துவதற்காக எட்டு டன் எடையிலான செவ்வந்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா, மல்லிகை போன்ற மலர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT