தமிழகத்தில் காற்றின் தரம் சுவாசிக்க உகந்ததாக உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜி.எஸ்.மணி என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு வாரத்துக்கும் மேலாக காற்று மாசு அதிகரித்து புகை மூட்டமாக காட்சியளித்தது. குறிப்பாக, சென்னையில் காற்று தரக்குறியீடு பல இடங்களில் 500 ஆக இருந்தது. எனவே, மத்திய அரசின், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான தேசிய திட்டத்தில், சென்னையையும் இணைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காற்று மாசுவை குறைப்பதற்கான, தேசிய திட்டத்தில் திருச்சி, தூத்துக்குடி ஆகிய 2 மாநகரங்கள் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அமர்வின் உறுப்பினர்கள் வழங்கிய உத்தரவில்‘‘சென்னை உட்பட தமிழகத்தில்உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காற்றின் தரம் சுவாசிக்க உகந்ததாக உள்ளதா, காற்று மாசுவை அளவிட போதுமான கருவிகள் உள்ளதா, காற்று மாசைகுறைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பன குறித்து ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் விரிவான அறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.