நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை ஏமாற்றமும், வேதனையும் அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
2024-ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர்பொருளாதாரமாக ஆக்குவோம் என கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்தவொரு அறிகுறியும் நாட்டில் தென்படவில்லை. மாறாக 2018-19-ல் 6.8 சதவீதமாக நாட்டின் மொத்த வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) இப்போது 5 சதவீதத்துக்கும் கீழே சரிந்து விட்டது. இந்த நிலையில் நாளை (இன்று) தாக்கல்செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டின் முன்னோட்டமாகக் கருதப்படும் குடியரசுத் தலைவரின் உரை வெற்று அரசியல் அறிக்கையாக முடிந்திருக்கிறது. இது மிகவும் வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது.
குடியுரிமைச் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவற்றை மத்திய அரசின் சாதனைகளாக குடியரசுத் தலைவர் பாராட்டியிருப்பது மக்களின்உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. அயல்நாட்டு நிறுவனங்கள் இங்கே தொழில் செய்வதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு அதற்கான பட்டியலில் இந்தியா உயர்ந்திருப்பதாக குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறார். அப்படி உயர்ந்ததால் இந்தியாவுக்குள் வந்த முதலீடுகள் எவ்வளவு என்பது தெரிவிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் மீது வன்கொடுமைகள் ஏவப்படுவதாக குடியரசுத் தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர் எந்த நிலையில் உள்ளனர் என்று அவர் எண்ணிப் பார்க்கவில்லை. இவ்வாறு திருமாவளவனின் அரிக்கையில் கூறப்பட்டுள்ளது.