அண்ணா பல்கலை.யின் முதல் பருவத் தேர்வில் பைத்தான் பாடப்பிரிவில் 52 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கான தேர்வுகள் பல்கலை. சார்பில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வுகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் பைத்தான் என்ற கணினி மென்பொருள் தொடர்பான பாடப்பிரிவில் 52 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
மொத்தம் 64,810 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், 31,044 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பைத்தான் பாடப்பிரிவில் செயற்கை நுண்ணறிவு குறித்த மென்பொருள் கோடிங் விவரங்கள் அதிக அளவு இடம்பெறுகின்றன.
இந்த பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. மாணவர்களும் புரிந்துகொண்டு படிக்க சிரமப்படுகின்றனர். அதனால் துறை வல்லுநர்கள் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பைத்தான் கோடிங் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.