தமிழகம்

4 லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசின் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா?- உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

சு.கோமதி விநாயகம்

தமிழகத்தில் உள்ள 4 லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்களை பாதுகாக்க பட்ஜெட்டில் சலுகைகள் வழங்க வேண்டும் என, உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வீட்டு பயன்பாட்டில் அத்தியா வசிய தேவையாக தீப்பெட்டி உள்ளது. ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தீப்பெட்டிக்கு18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ, அதே வரி தான் தயாரிப்பு பொருட்களுக்கும் இருக்கும். ஆனால்,தீப்பெட்டியின் மூலப்பொருட்களான குச்சி, அட்டை, பேப்பர் ஆகியவற்றுக்கு 12 சதவீதம் தான் ஜிஎஸ்டிஉள்ளது. ஆனால் தீப்பெட்டிக்கு மட்டும் 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி தொழிலில் ஊதிய உயர்வு அளிக்க முடியாததால், தொழிலாளர்கள் வேறுதொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலில் பின்னடைவு

கடந்த நவம்பர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தீப்பெட் டிக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், கடந்த 1-ம் தேதி முதல் தீப்பெட்டிக்கான ஏற்றுமதி ஊக்கத்தொகையை 4 சதவீதத்திலிருந்து 1.50 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இது தீப்பெட்டி தொழிலில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் தங்களது தொழிலை பாதுகாக்க மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

4 லட்சம் தொழிலாளர்கள்

இதுகுறித்து, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறியதாவது: தீப்பெட்டிக்கான ஏற்றுமதி ஊக்கத்தொகை 7 சதவீதமாக இருந்தது. இதை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 4 சதவீதமாக குறைத்தனர். அதன் பின்னர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுதொழில் பட்டியலில் இருந்து தீப்பெட்டியை நீக்கியது. ஜிஎஸ்டியை 18 சதவீதமாக்கியது. கடந்த 1-ம் தேதி முதல் தீப்பெட்டிக்கான ஊக்கத்தொகையை 1.50 சதவீதமாக குறைத்துவிட்டது.

தீப்பெட்டி தொழில் மூலம் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். எனவே, தீப்பெட்டி தொழிலை சிறுதொழில் பட்டியலில் மீண்டும் இணைக்க வேண்டும். ஜிஎஸ்டியை குறைத்து,ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை மீண்டும் 7 சதவீதமாக கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட்டில் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தீப்பெட்டி தொழிலை சிறுதொழில் பட்டியலில் மீண்டும் இணைக்க வேண்டும்.

SCROLL FOR NEXT