தமிழகம்

கரோனா வைரஸ் அச்சம்; சீனாவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த 9 மருத்துவ மாணவர்கள் தொடர் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

சீனாவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த 9 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை நடத்தி, தொடர் கண்காணிக்கும் பணியில் மருத்துவத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பரில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதனால் அங்கு உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சீன நாட்டில் மருத்துக் கல்வி பயின்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், அவர்கள் நாடு திரும்பத் தொடங்கினர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களுக்கு அங்கு முழு பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி வந்த அவர்களை மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கோவிந்தன் கூறுறியதாவது:

“சீனாவில் தங்கி மருத்துவம் படித்த மாணவர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏதும் இல்லை என அறியப்பட்டு, இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாணவ, மாணவிகள் கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையத்தில் முழு பரிசோதனை செய்யப்பட்டு வைரஸ் தாக்குதல் இல்லை என உறுதி செய்யப்பட்டு இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, வீடுகளில் உள்ள 9 பேருக்கும் மருத்துவ ஆய்வாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு வைரஸ், காய்ச்சல் என எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் 9 பேரும் இருக்க வேண்டும்.

வீட்டினைத் தூய்மையாகவும், சுகாதாரமாக இருக்கவும், அடிக்கடிக் கைகளை கழுவ வேண்டும். உடைகள் வெந்நீரில் போட்டு தூய்மைப்படுத்தி பின்னர் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 பேரையும் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும் யாரும் அச்சப்படத் தேவையில்லை”.

இவ்வாறு மருத்துவர் கோவிந்தன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT