‘‘தமிழக அமைச்சர்களின் ஊழல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பின்னர் வெளிவரும் ’’ என்று மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளரகளிடம் அவர் கூறியதாவது:
அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வில், சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால் இதை மக்களால் நம்பமுடியாதது. அரசன் எவ்வழியோ அவ்வழியிலயே ஆட்சியிலும் முறைகேடும் நடக்கிறது. முதல்வர் கே.பழனிச்சாமி தலைமையில் அரசு ஒரு கம்பெனியைப் போல நடக்கிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் உண்மை வெளிவரும் வகையில் முறையான விசாரணை நடத்த வேண்டும். ஏற்கெனவே நடத்தப்பட டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தஞ்சை பகுதி மக்கள் தாய் தமிழில் நடத்தவேண்டும் எனவும், ஆகம விதிப்படி நடத்தப்பட வேண்டும் எனவும் விருப்பபட்டனர். ஆனால், நீதிமன்றம் இரு மொழிகளிலும் நடத்த உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கதக்கது.
கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும். தற்போது அதிகாரத்தில் இருப்பதால் முறைகேடுகளை மறைக்க முடிகிறது. அமைச்சர்களின் ஊழல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பின்னர் வெளிவரும்.
தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலையே உள்ளது. மாநகராட்சி தேர்தல் அறிவிப்பது சந்தேகம் தான், ’’ என்றார்.