தனது உடல் நலம் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என விஜயகாந்த் தொண்டர்கள் ஆரவாரத்திற்கிடையே பேசினார்.
இன்று தங்களின் 30-வது திருமண நாளைக் கொண்டாடும் விஜயகாந்த் பிரேமலதா தம்பதி அந்த விழாவை கட்சியின் தேர்தல் வெற்றிவிழாவாக மாற்றி கொண்டாடினர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
அதில் தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த விழாவில் விஜயகாந்த் பிரேமலதா தம்பதிகளின் 30-ம் ஆண்டு திருமண விழாவும் நடந்தது.
இரண்டு விழாவையும் ஒன்றாக இணைத்து நடத்தினர் . பாராட்டு விழா நடைபெற்ற மேடையில் மாலை மாற்றி கொண்டனர். விழாவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே சுதிஷ் , விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் விஜயகாந்த் உற்சாகமாக கலந்துக்கொண்டார். வழக்கமாக மேடைக்கு வந்தவுடன் கையசைக்கும் அவர் காரைவிட்டு இறங்கியவுடனேயே கையசைத்தப்படி வந்தார். பின்னர் அவர் தொண்டர்களிடம் மகிழ்ச்சியுடன் உரையாட ஆரம்பித்தார். தன்னுடைய வழக்கமான பாணியில் நாக்கை மடித்து துருத்தி ஏதோ சொல்ல தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பின்னர் விஜயகாந்த் பிரேமலதா சொல்லச்சொல்ல சில வார்த்தைகள் பேசினார். அவர் பேசியதாவது:
“தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள், மக்களுக்கு நல்லது செய்ய நலம்பெற்று நிச்சயமாக வருவேன். சீக்கிரம் மீண்டும் வருவேன்” என பேசினார். அதைக்கேட்டு தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.
இந்த கூட்டத்தில் எல்.கே சுதிஷ் பேசியதாவது:
“தேமுதிக தொடங்கப்படுவதற்கு 9 ஆண்டுகள் முன்பே 1996-ல் விஜயகாந்த் ரசிகர்மன்றமாக இருந்த நேரத்திலேயே உள்ளாட்சி தேர்தலில் 1000 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றோம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 80% சதவீத இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது” .
என சுதீஷ் பேசினார்.