குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டங்களால் முறியடிக்க முடியும் என, 'தி இந்து' வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்தார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் நேற்று (ஜன.30) மாலை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவொற்றியூலிருந்து தாம்பரம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில் 'தி இந்து' வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் என்.ராம் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"இந்தப் போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்குமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால், இது நாடு தழுவிய இயக்கம். இதற்கு எதிர்பார்க்காத அளவுக்கு வேகம் உண்டு. அதனால், இந்தச் சட்டத்தை முறியடிக்க முடியும் என்றுதான் நினைக்கிறேன். சிஏஏ மட்டுமின்றி அதனுடன் தொடர்புடைய என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றையும் முறியடிக்க முடியும் என்று தான் நினைக்கிறேன். இந்தப் போராட்டங்கள் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் 1,000 இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட இந்தப் போராட்டத்தில் 40 லட்சம் பேர் பங்கேற்றிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னிச்சையாக மக்களும் மாணவர்களும் போராடுகின்றனர். யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு இப்படியொரு இயக்கம் ஏற்படும் என்பதை யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாது. எந்த ஜோதிட வல்லுநராலும் இதனைக் கணிக்க முடியாது".
இவ்வாறு என்.ராம் தெரிவித்தார்.
இதையடுத்து, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து பேசிய என்.ராம், "பல்கலைக்கழகங்களுக்கு எதிராக நிறைய அக்கிரமங்கள் நடக்கின்றன. ஜாமியா முதல் ஜேஎன்யு வரை குண்டர்கள் முகமூடி அணிந்துகொண்டு போலீஸார் உதவியுடன் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இந்த அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும். மோடி அரசை ஆதரிக்கும் ஊடகங்கள் கூட இப்போது வேறு மாதிரியாக எழுத ஆரம்பித்துவிட்டன. உலக நாடுகளின் பொருளாதார அறிஞர்கள், ஊடகங்கள் தங்களுக்கு இதைப் பற்றிக் கவலையில்லை எனச் சொல்லலாம். ஆனால், அவர்களையும் இச்சட்டம் பாதிக்கும். உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவுக்கு கெட்ட பெயர் கொண்டு வந்தது இந்த அரசாங்கம் தான்" எனத் தெரிவித்தார்.